சம்பளம் வந்த வேகத்துல காணாம போயிடுதா? 10-ஆம் தேதிக்கு மேல காசு எங்க போகுதுன்னே தெரியலையா?
பேனா மற்றும் டைரி வச்சு எப்படி உங்க மாசாந்திர செலவை துல்லியமா கணக்கு வைக்கிறதுன்னு விளக்கும் ஒரு எளிய, ஆடம்பரமில்லாத பட்ஜெட் முறை.
நம்மில் பலருக்கு இருக்கும் மிகப்பெரிய குழப்பமே இதுதான். மாசம் 50,000 சம்பாதிப்போம், ஆனா மாச கடைசியில கையில 50 ரூபாய் கூட மிஞ்சாது.
பணத்தை நிர்வகிக்க ஆயிரக்கணக்கான செயலிகள் (Apps) இருக்கலாம். ஆனால், நம் அம்மாக்கள் காட்டிய வழியில் ஒரு டைரி மற்றும் பேனா கொண்டு கணக்கு எழுதுவதுதான் எப்போதும் சிறந்தது. அந்த எளிய முறையை எப்படிப் பின்பற்றுவது என்று பார்ப்போம்.
Step 1: முதலில் வருமானத்தைத் துல்லியமாக எழுதுங்கள்#
பலர் செய்யும் தவறு, தங்களின் சம்பளத்தை ரவுண்டாகக் கணக்கிடுவது.
உதாரணத்திற்கு: உங்கள் சம்பளம் ₹52,563 என்று வைத்துக்கொள்வோம். பலர் இதை ₹50,000 என்று கணக்கு வைத்துக்கொண்டு மீதி ₹2,500-ஐ 'பஃபர்' (Buffer) என விட்டுவிடுவார்கள். ஆனால், அந்தப் பணம் எங்கே போனது என்றே தெரியாமல் செலவாகிவிடும்.
அதற்குப் பதிலாக, உங்கள் வருமானத்தை ₹52,563 என்றே கணக்கில் கொள்ளுங்கள்.
அம்மாவின் 'உண்டியல்' ரகசியம்#
எங்க அம்மா கடந்த 30 வருஷத்துக்கும் மேலா இந்த முறையைத் தான் பின்பற்றி வராங்க. சம்பளம் வந்ததும், அந்த வருமானத்தின் கடைசி இரண்டு இலக்கங்களை நன்றிக்கடனாக அல்லது ஒரு சேமிப்பாகத் தனியாகப் பிரித்துவிடுவார்கள்.
உதாரணமாக, உங்கள் சம்பளம் ₹52,563 என்றால், அந்தச் சில்லறைத் தொகையான ₹63-ஐ அப்படியே எடுத்து ஒரு உண்டியலில் போட்டுவிடுவார்கள். உங்களுக்குக் கடவுள் நம்பிக்கை இருந்தால் அதை இறைவனுக்குச் செய்யும் நன்றிக்கடனாக உண்டியலில் போடுங்கள். ஒருவேளை உங்களுக்கு அந்த நம்பிக்கை இல்லை என்றால், அந்தப் பணத்தை வீதியில் யாசகம் கேட்பவர்களுக்கோ அல்லது தேவையுள்ளவர்களுக்கோ கொடுத்து உதவுங்கள். இது உங்கள் மனதிற்கு ஒரு பெரிய நிறைவைத் தருவதோடு, பணத்தைக் கையாளும் ஒரு நல்ல ஒழுக்கத்தையும் (Discipline) ஆரம்பத்திலிருந்தே உங்களுக்குக் கொடுக்கும்.
Step 2: காஸ்ட்லி டைரி வேண்டாம்; கணக்கு துல்லியமா இருக்க இந்த 'Layout' போதும்#
பட்ஜெட் போடுவதற்கு என்று விலை உயர்ந்த அல்லது ஆடம்பரமான டைரிகளைத் தேடிப் போய் வாங்காதீர்கள். உங்கள் நோக்கம் கணக்கு எழுதுவதுதானே தவிர, டைரியை அலங்கரிப்பது அல்ல. ஒரு சாதாரண நோட்டுப் புத்தகம் அல்லது கையில் இருக்கும் ஏதோ ஒரு டைரி கூட இதற்குப் போதுமானது. டைரி வாங்க அதிகப் பணம் செலவழிப்பதே ஒரு தேவையற்ற செலவுதான்!
டைரியை இப்படி எளிமையாகப் பிரித்துக் கொள்ளுங்கள்:
- டைரியின் பின்பக்கங்கள் (Notes Section): வாடகை, EMI, கேஸ் பில், இன்சூரன்ஸ் மற்றும் மொபைல் ரீசார்ஜ் போன்ற மாதத்தின் நிலையான பெரிய செலவுகளை (Fixed Expenses) இங்கே ஒரு பட்டியலாக எழுதி வையுங்கள். இது பெரிதாக மாறாது.
- டைரியின் முன்பக்கங்கள் (Front Section): அன்றாடச் செலவுகளுக்கு இதைப் பயன்படுத்துங்கள்.
- ₹10 விதி: 1 ரூபாய், 2 ரூபாய் கணக்கெல்லாம் தேவையில்லை. ஆனால் ₹10-க்கு மேல் செலவு செய்யும் அனைத்தையும் எழுதுங்கள்.
- டீ-பிஸ்கட் சாப்பிட்டது, யாருக்காவது கைமாற்றாகப் பணம் கொடுத்தது அல்லது வாங்கியது என அனைத்தையும் விடாமல் குறியுங்கள்.
- மின்சாரம் (EB), பெட்ரோல், தண்ணீர், காய்கறி, ஸ்விக்கி/ஸொமாட்டோ ஆர்டர் என எதுவாக இருந்தாலும், அந்தச் செலவு நடந்த அன்றே டைரியில் ஏற்றிவிடுங்கள். அப்போதுதான் அடுத்த மாதம் எங்கே 'வீண் செலவு' நடக்கிறது எனத் தெரியும்.
முக்கியமானது, அந்தச் செலவு நடந்த உடனேயே அல்லது அன்றைய தினம் முடிவதற்குள் குறித்துவிடுவதுதான். பார்ப்பதற்கு எளிமையாக இருந்தாலும், இந்த அமைப்புதான் உங்கள் பணப்புழக்கத்தைத் துல்லியமாகக் காட்டும்.
இப்போதைக்கு இது போதும்! ஆடம்பரமான டெக்கரேஷன் தேவையில்லை. தினமும் எழுதும் 'Consistency' தான் முக்கியம்.
ஏன் ஆப்ஸ் (Apps) அல்லது எக்செல் (Excel) வேண்டாம்? — பேனா, காகிதத்தின் வலிமை#
கணக்கு எழுதத் தொடங்கும் போது ஆப்ஸ்களைத் தேடாதீர்கள். பேனா மற்றும் காகிதத்தைப் பயன்படுத்துங்கள். ஏன் தெரியுமா? ஒரு ஆப்பில் தொகையை டைப் செய்வதற்கும், ஒரு காகிதத்தில் உங்கள் கைகளால் அந்தச் செலவை எழுதுவதற்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது.
நீங்கள் கைகளால் எழுதும் போதுதான், அந்தப் பணத்தை நீங்கள் செலவு செய்கிறீர்கள் என்கிற 'வலி' (Pain of Spending) உங்கள் மனதிற்குத் தெரியும்.
கார்டை ஸ்வைப் செய்யும் போதோ அல்லது ஆப்பில் என்டர் செய்யும் போதோ அந்த உணர்வு இருக்காது. ஆனால், "₹800 — அனாவசியமான ஹோட்டல் செலவு" என்று உங்கள் கைப்பட எழுதும் போது, அது உங்கள் மூளையில் ஆழமாகப் பதியும். அந்தச் சிறு குற்ற உணர்வு அல்லது வலிதான் அடுத்த முறை தேவையற்ற செலவு செய்யும்போது உங்களைத் தடுக்கும்.
இன்றே தொடங்குங்கள்: ஒரு சவால்#
இதை வெறும் வாசிப்போடு நிறுத்திவிடாமல், இன்றிலிருந்தே செயல்படுத்தத் தொடங்குங்கள். ஒரு வாரத்திற்கு மட்டும், நான் சொன்னது போல ஒரு சாதாரண நோட்டில் உங்கள் வரவு மற்றும் ₹10-க்கு மேல் செய்யும் அனைத்துச் செலவுகளையும் குறித்து வாருங்கள்.
பெரிய மாற்றங்கள் உடனே வராது, ஆனால் இந்த ஒரு வாரம் நீங்கள் எழுதும் கணக்குதான் உங்கள் நிதி சுதந்திரத்திற்கான முதல் படி.
அடுத்த ஞாயிறு வரை உங்கள் பேனாவுக்கும் டைரிக்கும் வேலை கொடுங்கள். உங்கள் பணத்தின் மீது உங்களுக்குக் கட்டுப்பாடு வருவதை நீங்களே உணர்வீர்கள்!
ஆனால், இது வெறும் ஆரம்பம்தான். அடுத்த வாரம் நாம் இன்னும் முக்கியமான விஷயங்களைப் பேசப்போகிறோம்:
- கணக்கு எழுதிய பிறகு என்ன செய்ய வேண்டும்?: வெறும் எண்கள் மட்டும் போதாது, அந்தத் தரவுகளை வைத்து உங்கள் நிதி நிலையை எப்படி உயர்த்துவது?
- சேமிப்பு ரகசியங்கள்: உங்கள் செலவுகளில் மறைந்திருக்கும் சிறு துளைகளைக் கண்டுபிடித்து, பணத்தைச் சேமிப்பதற்கான எளிய வழிகள் என்னென்ன?
உங்கள் உழைப்புக்கான பலனை உங்கள் டைரியே உங்களுக்குக் காட்டும். காத்திருங்கள்!
பணத்தை ஆள்வோம், வாழ்க்கையை வெல்வோம்!
- personal finance
- budgeting
- savings