சொந்த வீடு — ஏன் அவசியம்?
வாடகை வீட்டின் நிலையற்ற தன்மை, ஓனர் தொந்தரவு, 'செத்த பணம்' பிரச்சனைகளிலிருந்து — பாதுகாப்பு, சுதந்திரம், சொத்து என சொந்த வீட்டின் நன்மைகள் வரை ஒரு விரிவான பார்வை.
சொந்த வீடு என்பது வெறும் செங்கல் சிமெண்ட் கட்டிடம் மட்டுமல்ல. அது நம்ம பாதுகாப்பு, அடையாளம், நம்ம எதிர்காலத்துக்கான முதலீடு. ஏன் சொந்த வீடு முக்கியம்னு இந்தக் கட்டுரையில பார்ப்போம்.
வாடகை வீட்டின் பிரச்சனைகள்#
பலர் வாடகை வீட்ல வருஷக் கணக்கா இருக்கோம். ஆனா அதுல இருக்க சில பிரச்சனைகள் நம்ம நிம்மதியைக் குலைக்கும்.
முதல் பிரச்சனை — நிலையற்ற தன்மை. எப்போ ஓனர் காலி பண்ண சொல்வாரோங்கிற பயம் இருந்துகிட்டே இருக்கும்.
ரெண்டாவது — வாடகை உயர்வு. ஒவ்வொரு வருஷமும் (அல்லது ஓனர் நினைக்கும் போது) வாடகையை ஏத்துவாங்க. நம்ம பட்ஜெட்டை இது பெரிய அளவுல பாதிக்கும். கட்டுப்படியாகாம வேற வீடு தேட வேண்டிய நிலை வரும்.
மூணாவது — ஓனர் தொந்தரவு. சில வீட்டு ஓனர்கள் சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கேள்வி கேட்பாங்க, வீட்டுக்கு அடிக்கடி வருவாங்க, தனிப்பட்ட விஷயங்கள்ல தலையிடுவாங்க. இது சுதந்திரமா வாழ விடாது.
ஓனர் தொந்தரவுல இன்னொன்னு — கண்டிஷன்கள். "நைட் லேட்டா வரக்கூடாது", "நண்பர்கள் தங்கக்கூடாது", "சத்தம் போடக்கூடாது"ன்னு பல ரூல்ஸ் போடுவாங்க. நம்ம சொந்த வீட்ல இருக்க மாதிரி ஒரு உணர்வே வராது.
அடுத்து, கட்டுப்பாடுகள். வீட்ல ஒரு ஆணி அடிக்கணும்னா கூட ஓனர்கிட்ட கேட்கணும். செல்லப் பிராணி வளர்க்க முடியாது. நமக்குப் பிடிச்ச மாதிரி வீட்டை மாத்தவோ, அழகுபடுத்தவோ முடியாது.
நம்ம பணம் வீண் போகுது. மாசம் மாசம் கட்டுற வாடகை பணம் திரும்பி வராது. அதுவே சொந்த வீடுன்னா, EMI கட்ட கட்ட அது சொத்தா மாறுது. வாடகை ஒரு வகையில 'செத்த பணம்' (Dead Money).
முக்கியமா, வீடு மாறும் அலைச்சல். அடிக்கடி வீடு மாத்த வேண்டிய சூழல் வரலாம். பேக் பண்றது, லாரி பிடிக்கிறது, புது இடத்துக்குப் பொருந்துறதுன்னு இதுவே பெரிய தலைவலி. குழந்தைகளோட படிப்பு, பழக்கவழக்கங்கள் பாதிக்கப்படலாம்.
சொந்த வீட்டின் நன்மைகள்#
இதெல்லாம் உல்டா பண்ணா சொந்த வீட்டு நன்மை.
பாதுகாப்பு & ஸ்திரத்தன்மை. யாரும் நம்மள காலி பண்ண சொல்ல முடியாது. நம்ம குடும்பம் பாதுகாப்பா ஒரு கூரைக்குக் கீழ இருக்குங்கிற நிம்மதி கிடைக்கும்.
முழு சுதந்திரம்! உங்க வீட்டை உங்களுக்குப் பிடிச்ச மாதிரி மாத்திக்கலாம். பெயிண்ட் அடிக்கலாம், இன்டீரியர் பண்ணலாம், தோட்டம் போடலாம். உங்க ரசனைக்கு ஏத்த மாதிரி வீட்டை உருவாக்கலாம்.
இது ஒரு சொத்து! காலப்போக்குல உங்க வீடோட மதிப்பு உயரும். இது ஒரு சிறந்த நீண்ட கால முதலீடு. உங்க நிதிப் பாதுகாப்பை இது உறுதி செய்யும். தமிழ்நாட்டுல நிலத்தோட மதிப்பு பெரும்பாலும் ஏறிட்டேதான் இருக்கு.
மன நிம்மதி & பெருமை. 'இது என் வீடு'ன்னு சொல்றதுல ஒரு தனி பெருமை இருக்கு. வாடகை உயர்வு, ஓனர் பிரச்சனைன்னு எந்த கவலையும் இல்லாம நிம்மதியா இருக்கலாம்.
குடும்பத்துக்கான எதிர்காலம். உங்க குழந்தைகளுக்கு நீங்க விட்டுச் செல்ற ஒரு பெரிய சொத்து இது. அவங்க எதிர்காலத்துக்கு இது ஒரு அடித்தளமா இருக்கும். "மாப்ள சொந்த வீடு வெச்சு இருக்காரா" அப்படிங்கற கேள்வி பல திருமணங்களை நிறுத்தி உள்ளது.
நிதிப் பாதுகாப்பு. அவசர பணத் தேவைக்கு உங்க வீட்டை அடமானம் வச்சு கடன் பெற முடியும். EMI கட்டுறது ஒரு வகையில சேமிப்பு மாதிரிதான்.
பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பு. வாடகை வருஷா வருஷம் ஏறலாம், ஆனா லோன் EMI பெரும்பாலும் நிலையா இருக்கும் (not always, but mostly). Inflation ஏறினா RBI வட்டியை குறைக்கத்தான் செய்யும் பெரும்பாலும். இது நீண்ட காலத்துல பணத்தைச் சேமிக்க உதவும்.
திட்டமிட்டு செயல்படுங்க#
சொந்த வீடு வாங்குறது பெரிய முடிவு. நல்லா திட்டமிடணும். உங்க பட்ஜெட் என்ன, எங்க வாங்கலாம், லோன் எப்படி வாங்குறதுன்னு எல்லாத்தையும் யோசிச்சு செயல்படனும். சின்னதா இருந்தாலும் சொந்த வீடு வாங்குறது நல்லது.
வாடகை வீட்டின் கஷ்டங்களை விட சொந்த வீட்டின் சந்தோஷங்களும் நன்மைகளும் அதிகம். உங்க கனவு இல்லத்தை அடைய முயற்சி செய்யுங்க, திட்டமிடுங்க, செயல்படுங்க! வாழ்த்துக்கள்!
வீடு அவசியம், கட்டாயம். வாழ்நாள் குறிக்கோள்.
- home ownership
- real estate
- personal finance